| ADDED : ஆக 12, 2024 11:14 PM
சிவகங்கை : சிவகங்கை கூட்டுறவுத்துறையில் எடையாளர் பணிக்கு போலி நியமன உத்தரவு வழங்கியது தொடர்பாக இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் ஏ.சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சிவகங்கை கூட்டுறவுத்துறையில் 2023 ல் ரேஷன் கடை விற்பனையாளர் காலி பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடந்தது. கடந்தாண்டு ஆகஸ்டில் 103 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்கிடையில் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை (பாம்கோ) ரேஷன் கடைகளுக்கு எடையாளர் பணிக்கு 3 பேரை நியமித்துள்ளதாக போலி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து போலி பணி நியமன உத்தரவு வழங்கியவர்கள் குறித்து விசாரிக்க துணை பதிவாளர் பாரதி தலைமையில் குழுவை கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் நியமித்தார். இந்த விசாரணையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்தும் தினமலர் 'டீக்கடை பெஞ்ச்' பகுதியில் செய்தி வெளியானது. இணைப்பதிவாளர் விசாரணை
அதன் எதிரொலியாக 2 நாட்களாக இணை பதிவாளர் தலைமையில் குழுக்கள் அமைத்து துரித விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் போலி நியமன உத்தரவு தயாரித்ததில் தொடர்பு இருப்பதாக கூறி கிளார்க் பி.பரசுராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விசாரணையின் முடிவில் இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளராக இருந்த ஏ.சரவணனையும் சஸ்பெண்ட் செய்து இணைபதிவாளர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டார்.போலி நியமன உத்தரவு தயாரித்தது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்வது என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.