| ADDED : ஜூன் 25, 2024 11:20 PM
திருப்புத்துார்: கிராமங்களில் அதிகரித்து வரும் குப்பையை அகற்ற கூடுதல் துாய்மை பணியாளர்கள், விரிவான உரக்கிடங்கு வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகங்கள் கோரியுள்ளன.50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குப்பை அரிதாக இருந்தது. எல்லாமே மக்கும் குப்பையாக இருந்தது என்பதால் குப்பை சேகரமாகவில்லை. பிளாஸ்டிக்,பாலிதீன் பொருட்கள் வந்த பின்னர் குப்பை அதிகரிக்கத் துவங்கி விட்டது. மக்காத பொருள் என்பதால் அழியாமல் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகத் துவங்கி விட்டது. தண்ணீரில் நனையாதது, நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம், விலை குறைவு என்பதால் பொதுமக்களிடையே இந்த பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதற்கேற்ப குப்பைகளும் குவியத் துவங்கி விட்டது. நகர் புறங்களில் இருந்த இந்த பிரச்னை தற்போது கிராமங்களுக்கும் வந்து விட்டது. கிராமங்களில் குப்பையை அகற்ற தற்போது ஊராட்சிகளின் தலைநகரில் மட்டும் சில துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இவர்களால் முழுமையாக குப்பையை சேகரிக்க முடிவதில்லை. குக்கிராமங்களில் இந்தப் பணியே நடைபெறுவதில்லை.மேலும் ஊராட்சியில் ஓரிடத்தில் மட்டும் குப்பை கொட்ட இரு குழிகள் உள்ளன. அது தோண்டப்பட்டு 6 வருடங்களாகி விட்டதால் பல இடங்களில் துார்ந்து போய் விட்டன. கிராமங்களின் எல்லைகளில் குவியும் குப்பையை காண முடிகிறது. ரோட்டோரங்களில் கிராம எல்லைகளில் குப்பை கொட்டப்படுகிறது. அப்பகுதி சுகாதாரக் கேடாகி வருகிறது. ஊராட்சி தலைவர் தரப்பில் கூறுகையில், ஊராட்சி மன்றங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் இல்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதியில்லை.தற்காலிக பணியாளர்களை நியமிக்க போதிய நிதியும் இல்லை. மேலும் குப்பைகளை தரம் பிரிக்க தனி பணியாளர் நியமனம் அவசியம். தற்போது குப்பை கொட்ட இரு குழிகள் உள்ளன. அதை 14 குழிகளாக அதிகரித்து தினசரி 2 குழி வீதம் மக்கும், மக்கா குப்பை பிரிக்க வேண்டும். உரம் தயாரிப்பது எளிதாக இருக்கும். ' என்றனர். ஊராட்சி செயலர்கள் தரப்பில் கூறுகையில், கிராம மக்கள்தொ கையில் 150 பேருக்கு ஒரு தூய்மைப் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும்.ஆனால் தற்போது அந்த விகிதம் இல்லை. 1000 பேர் உள்ள இடத்தில் 3,4 பணியாளர்களே உள்ளனர். கூடுதல் பணியாளர் நியமித்து, தற்போதைய ஊதியமான ரூ 5 ஆயிரம் என்பதும் அதிகரிக்கப்பட வேண்டும். குப்பைகளில் குழந்தைகளின் மலம், உடைந்த கண்ணாடிகள் போடாமல் தவிர்க்கவும், பாலிதீன் தவிர்ப்பையும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். உரக்குழியை அதிகரிக்க நிதி ஒதுக்க வேண்டும்' என்றனர்.ஒரு கிராமம் உள்ள ஊராட்சியில் குப்பை சேகரித்து, பிரித்து, உரமாக்க வாய்ப்புண்டு. பல கிராமங்கள் உள்ள ஊராட்சிகளில் சில கிராமங்களில் குப்பை சேகரிக்க தூய்மைப் பணியாளர்களே இல்லை. இதனால் குப்பை தெருவுக்கும், ரோட்டுக்கும் வந்து விடுகின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்க்க அரசு புதிய திட்டம் உருவாக்க வேண்டும். மக்கள் தொகைக் கேற்ப பணியாளர், குப்பைகளை பிரிக்க தனி பணியாளர், கிராம வாரியாக பணியாளர் நியமனம், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உரக்கிடங்கு என்று விரிவான இட வசதியை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.