வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தவிக்கும் பஸ் டிரைவர்கள்
திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வெயில் சதத்தை தாண்டி வருவதால் பஸ் டிரைவர்கள் பலரும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக கமுதி, பரமக்குடி,முதுகுளத்தூர், ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக செப்டம்பரில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விடும்.ஆனால் 13 நாட்களாகியும் மழை எதுவும்இல்லை. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கோடை காலம் போன்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்பு அடைவதுடன் பஸ் டிரைவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்ஜின் சூடு, வெயிலின் தாக்கம் ஆகியவற்றால் டிரைவர்கள் பரிதவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் கடந்த இரு நாட்களாக சதத்தை தாண்டி வெயிலின் தாக்கம் உள்ளது.டிரைவர்கள் கூறுகையில், புதிதாக வழங்கப்பட்ட ஊதா மற்றும் மஞ்சள் நிற பஸ்களில் மேற்கூரை லேசான தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதும் கொளுத்தும்வெயிலின் தாக்கம் பஸ்சினுள் அப்படியே இறங்குகிறது. இன்ஜின் பக்கத்தில் அமர்ந்து பஸ்சை இயக்குவதால் வெளி வெப்பம்,உள்வெப்பம் ஆகியவற்றால் சிரமம் ஏற்படுகிறது.மதுரையை அடுத்து மானாமதுரையில் தான் பஸ்சை சற்று நேரம் நிறுத்தி குடிநீர் பிடிக்க முடியும். தொடர்ச்சியாக இரு நாட்கள் பஸ்சை இயக்க முடியவில்லை, என்றனர். பெரும்பாலான பஸ் நிலையங்களில் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் பஸ்கள் வெயிலிலேயே நிறுத்தப்படுவதால் பஸ் முழுவதும் வெப்பம் பரவி விடுகிறது. பயணிகளை விட டிரைவர்கள் தான் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர். போக்குவரத்து கழகங்கள் பஸ் ஸ்டாண்ட்களில் டிரைவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.