உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி வாழை இலை விலை உயர்வு

முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி வாழை இலை விலை உயர்வு

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், கலியாந்துார், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே விவசாயிகள் வாழை பயிரிடுகின்றனர். கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் வாழை நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளது. ஆடி மாதத்திற்கு பின் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் வாழை இலை, வாழைக்காய், வாழை நல்ல விலை போகும். அறுவடைக்கு முன் பக்க கன்றுகள் மூலமும் அறுவடைக்கு பின் பெரிய மரத்திலும் வாழை இலைகளை அறுவடை செய்வார்கள்.ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்வார்கள், திருப்புவனம், திருப்பாச்சேத்தி வாழை இலைகள் பத்து நாட்கள் ஆனாலும் வாடாது. பச்சை நிறமும் மாறாது என்பதால் விரும்பி வாங்குவார்கள். கடந்த ஆகஸ்ட் வரை 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு இலை 450 ரூபாய் வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. திருப்புவனம் வட்டாரத்தில் 600 ஏக்கரில் ஒட்டு வாழை பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் முதல் ஆயிரத்து 200 கன்றுகள் வீதம் நடவு செய்து ஒரு வருடம் கழித்து வாழை அறுவடை செய்யப்படும், வாழையை பொறுத்த மட்டிலும் வாழை இலை, காய், மரம், நார் உள்ளிட்ட அனைத்துமே வருவாய் தர கூடியது என்பதால் விவசாயிகள் ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து வாழை பயிரிட்டுள்ளனர். மதுரை வாழை மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக திருப்பாச்சேத்தி வாழை மார்க்கெட் பிரசித்தி பெற்றது.ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் திருப்பாச்சேத்தி வந்து வாழை இலை, காய், மரம் ஆகியவற்றை வாங்கிச் செல்வார்கள், இந்த மாதம் 5, 6, 8, 15,16 என தொடர்ந்து விசேஷ நாட்கள் வருவதால் விலை இன்னும் உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி