உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாத பெரியாறு நீட்டிப்பு கால்வாய்

தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாத பெரியாறு நீட்டிப்பு கால்வாய்

சிங்கம்புணரி : கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் கூட பெரியாறு நீட்டிப்புக் கால்வாயை நிரந்தரமாக்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறாதது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீரை சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதிகளுக்கு குடிநீர், விவசாயத்திற்கு பயன்படுத்த 1990ம் ஆண்டு 7வது பிரிவு நீட்டிப்புக் கால்வாய் அமைக்கப்பட்டது. மாவட்ட எல்லையில் இருந்து சிங்கம்புணரி, காளாப்பூர், சூரக்குடி, முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, ஏரியூர், திருப்புத்துார் வரை பயன்பெறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. இதில் திறக்கப்படும் தண்ணீரை நம்பி 450 கண்மாய்கள் உள்ளன. இதற்கு 9159 ஏக்கர் நேரடி பாசனம் 12,445 ஏக்கர் மறைமுக பாசனம் உள்ளது. அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருக்கும் போது கூட நீட்டிப்பு கால்வாய் என்பதால் தண்ணீர் திறக்க முடியாத நிலை இருந்து வருகிறது.இக்கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றினால் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கும் போதும் இக்கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். இதற்காக இப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். இக்கால்வாய் அமைக்கப்பட்ட போது ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர கால்வாயாக மாற்றித் தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் கால்வாய் அமைக்க விவசாயிகள் பலர் பாசன நிலங்களை அளித்தனர். ஆனால் அதற்குப் பிறகு தண்ணீரும் வரவில்லை கால்வாயை நிரந்தரம் ஆக்கவும் இல்லை. தற்போது சில வருடங்களாக தண்ணீர் வந்தாலும் குடிநீருக்கும் விவசாயத்திற்கு முழு அளவில் பயன்படவில்லை. மேலும் மற்ற கால்வாய்களில் தண்ணீர் திறக்கும் போதே இக்கால்வாயிலும் தண்ணீர் திறந்தால் மட்டுமே முழு பயன் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள். இக்கால்வாயை நிரந்தரமாக்க வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம். பழனிசாமி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் கூட மனு அளித்திருக்கிறார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் கால அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் கூட பெரியாறு நீட்டிப்புக் கால்வாயை நிரந்தரம் ஆக்குவது குறித்த அறிவிப்பு வராதது கால்வாய் நீரை நம்பியிருக்கும் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ