காரைக்குடி கோர்ட் வளாகத்தில் தாக்குதல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸ்
காரைக்குடி: காரைக்குடி கோர்ட் வளாகத்தில் தொடர் தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருவதால் நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.திருநெல்வேலி கோர்ட் எதிரே வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காரைக்குடி கோர்ட் வளாகத்தில் தொடர்ந்து பிரச்னை நிலவி வருவதால் திடீரென்று நேற்று மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்தவர் விமல் 44. இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமான வழக்கு நடந்தது.இந்த வழக்கை காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சேர்ந்த பெண் வக்கீல் அமலாவிஜி 40, நடத்தி வந்தார். வக்கீலுக்கும் வழக்கு தொடர்ந்தவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வக்கீல் அமலாவிஜியை, கோர்ட் வளாகத்தில் வைத்து செருப்பால் அடித்து, கொன்று விடுவதாக விமல் மிரட்டினார். அமலாவிஜி புகாரின் பேரில், போலீசார் விமலை கைது செய்தனர்.* காரைக்குடி சந்தைப்பேட்டை சதீஷ்குமார் மனைவி சிந்து பிரியா 29. இவர் காரைக்குடி கோர்ட்டில் இலவச சட்ட ஆலோசனை மையத்தில் வேலை செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் சதீஷ்குமார் கோர்ட் அருகே சிந்து பிரியா மீது தாக்குதல் நடத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது சம்பந்தமாக சிந்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி கோர்ட் வளாகத்தில் தொடர் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால், நேற்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கானநிறுத்தப்பட்டனர்.