முதல்வர் திறந்த சிவகங்கை வணிக வளாகத்திற்கு சிக்கல்
சிவகங்கை; சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு முறைப்படி ஏலம் நடத்த வேண்டும் எனவும் ஏற்கனவே கடை நடத்தியவர்கள் தங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் மட்டும் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கியது.நீண்ட இழுபறிக்கு பின்னர் 18 கடைகள், தரைதளம், கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது கடந்த மாதம் எம்.பி., நிதியில் ரூ.2 கோடிக்கு திருப்புத்துார் மதுரை பஸ்கள் நிற்கும் பகுதிகளில் கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு பகுதி பணியை சிவகங்கை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்தும் கடைகளை தவிர கழிப்பிடம் மற்றும் பஸ் நிறுத்தமான காளையார்கோவில் மானாமதுரை பகுதி மட்டும் பயன்பாட்டிற்கு வந்தது. 18 கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் கடை வைத்து நடத்தி வந்தவர்கள் தங்களுக்கு ஏலத்தில் விரும்பிய கடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் ஏலத்தை முறைப்படி நடத்த வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.ஏற்கனவே தினசரி சந்தை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 90 கடைகள் கட்டப்பட்டு யாரும் ஏலம் எடுக்க வராமல் மூன்று முறைக்கு மேல் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் கடைகளும் ஏலம் விடாமல் இருப்பது நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு தான் கூறமுடியும் என்றார்.