சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை
திருப்புவனம்: தமிழகத்தில் பிப்ரவரி முதலே கோடை வெயிலின்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துஉள்ளது.தமிழகத்தில் கோடை துவங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் சிவகங்கை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நான்கு வழிச்சாலை பணி, ஆக்கிரமிப்பு என கடந்த சில வருடங்களில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் வட்டாரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் மினரல் வாட்டரை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். திருப்புவனத்தில் ஜி.கே. வாசன் எம்.பி., நிதியில் இருந்து ரயில்வே பீடர் ரோட்டில் இரண்டு ரூபாய்க்கு 15 லிட்டர் மினரல் வாட்டர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் எம்.எல்.ஏ., தமிழரசி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்புவனத்தில் மினரல் வாட்டர்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தேவை அதிகரிக்க அதிகரிக்க தட்டுப்பாடும் நிலவி வருகிறது.திருப்புவனத்தில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து பலரும் கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்கி வந்து வீடு வீடாக 20 லிட்டர் ரூ.30 முதல் 40 ரூபாய் என விற்பனை செய்கின்றனர். மேலும் நான்கு வழிச்சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் ரோட்டோரம் உள்ள கடைகளில் மினரல் வாட்டர் கேன் வாங்குவது வழக்கம். ரோட்டை ஒட்டி சில கடைகளில் தரமற்ற மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் தண்ணீரின் மூலம் பல நோய் தொற்று பரவி வரும் நிலையில் சுகாதாரமான தண்ணீர் என தரமற்ற மினரல் வாட்டரை பயன்படுத்துவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ரோட்டோர கடைகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டர் கேன்களை ஆய்வு செய்ய வேண்டும்.