ஆசிரியர்களின் போராட்டத்தால் மூடப்பட்ட பள்ளிகள்; பள்ளிக்கு வெளியே அமர்ந்து படித்த மாணவர்கள்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஆசிரியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிகள் பூட்டப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து தானாக படித்துச் சென்றனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் நேற்று (செப். 10) மாநிலந்தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.சிங்கம்புணரி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 67 பள்ளிகளில் 61 பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பள்ளிகள் பூட்டப்பட்டது. மாற்று ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் வராமல் பள்ளிகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் வெளியில் அமர்ந்து பாடம் படித்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.ஆ.முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி: டிட்டோஜாக் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் முழுமையாக வெற்றி அடைந்துள்ளது. சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 67 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 61க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாணவர்களின் கற்றல் இழப்பை கூடுதல் வகுப்பு மூலம் ஆசிரியர்கள் சரி செய்வார்கள்.எங்கள் கோரிக்கை குறித்து தமிழ்நாடு அரசு சமூகமான முடிவு எடுக்கவில்லை என்றால் வருகிற 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தை இதைவிட மிகவும் எழுச்சியுடன் நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.