| ADDED : ஜூலை 23, 2024 05:20 AM
சிவகங்கை: நிலக்கடலைக்கு காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் முன்வரலாம் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்த ஆண்டிற்கான நிலக்கடலை பயிருக்கான காப்பீடு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் எஸ்.புதுார், சிங்கம்புணரி ஒன்றியத்தில் வாராப்பூர், சிங்கம்புணரி, எஸ்.எஸ்., கோட்டை பிர்க்காக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பிர்க்காக்களில் சாகுபடி செய்யும் நிலக்கடலைக்கு பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.23,990. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.480 வீதம் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். அந்தந்த வங்கிகளில் பயிர் காப்பீடு செய்யலாம். கடன் பெறும், பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம். நிலக்கடலை சாகுபடி செய்துள்ள அல்லது ஆக., மாதத்திற்குள் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் பதிவு செய்யலாம். இதற்கான கடைசி நாள் செப்., 16 ஆகும். விவசாயிகள் உடனே பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது பதிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., விடம் பெற்ற அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பதிவு கட்டணத்துடன் செலுத்த வேண்டும்.காப்பீடு செய்யும் போது விவசாயிகள் கட்டாயம் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், சாகுபடி பரப்பு மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.