கோடை வெயில் புழுக்கத்தால் தவிக்கும் மாணவ, மாணவிகள்
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மின்விசிறி இருந்தும் இயங்காததால் மாணவ, மாணவியர்கள் புழுக்கத்தால் தவித்து வருகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கீழடி, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும், இதனாலேயே மார்ச் மாதத்திலேயே பொதுத்தேர்வுகள் தொடங்க ஆரம்பித்து விடும். இந்தாண்டு பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மழையில்லாத நிலையில் பிப்.,ல் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதிய அளவு காற்றோட்டம் இருப்பதில்லை. பள்ளி வகுப்பறைகளில் மின் விசிறி வசதி இருந்தாலும் சரிவர இயங்குவதில்லை. அரசு பள்ளிகளுக்கு பல இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதால் அருகில் உள்ள மரங்கள் முழுவதும் வெட்டப்பட்டு விட்டன. இதனால் புழுக்கத்தில் மாணவ, மாணவியர்கள் தவித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் மின்கட்டணம் காரணமாக மின் விசிறிகளை இயக்காததால் மாணவ, மாணவியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை கால நோய்களான வியர்க்குறு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் தொற்றுகளும் தலை காட்ட தொடங்கியுள்ளன. கிராமப்புற பள்ளிகளில் குடிநீர் வசதியும் சரிவர இருப்பதில்லை.