உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் அருகே தொடர்ந்து வெட்டப்படும் மரங்கள்

திருப்புவனம் அருகே தொடர்ந்து வெட்டப்படும் மரங்கள்

திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் தொடர்ந்து சாலையோர மரங்களை வெட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.மதுரையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக சாலையோரம் இருந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. சாலைப்பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டால் ஒரு மரத்திற்கு பத்து மரம் நடவு செய்து வளர்க்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டும் நான்கு வழிச்சாலையை ஒட்டி வெறும் புங்கை மரங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. அதனையும் சிலர் வெட்டி வருகின்றனர். இதே போல நகர்ப் பகுதிக்குள்ளும் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.திருப்புவனம் தாலுகா அலுவலகம் அருகே புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. குடியிருப்புகளுக்கு இடையூறாக மரங்கள் இருப்பதாக கருதி பலரும் மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். செல்லப்பனேந்தல் விலக்கு எதிரே சாலையோரம் இரண்டு ஆலமரங்கள் நிழல் தந்து வந்தன, சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக அதன் வேர்ப்பகுதியில் காய்ந்த இலைகளை குவித்து வைத்து தீவைத்து மரத்தை வலுவிழக்க செய்தனர். இது தொடர்பாக படத்துடன் செய்தி வெளியாகியும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆலமரத்தின் பல்வேறு கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆலமரம் சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கிராமமக்கள் புகார் அளித்ததால் தாசில்தார் முன்னிலையில் மரத்தின் ஒரு சில கிளைகள்மட்டும் வெட்டி அகற்றப்பட்டது என்றனர். ஆனால் மரத்தின் 70 சதவிகித பகுதிகளை வெட்டி அகற்றி உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சாலையோர மரங்கள் வெட்டுவது தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை