சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் நேற்று பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கின. கல்லல் அருகே நடராஜபுரம் ஓட்டுச்சாவடியில் இயந்திரம் பழுதானதால், மாற்று இயந்திரம் வரும் வரை இரண்டரை மணி நேரம் ஓட்டுபதிவு நிறுத்தப்பட்டது.சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்புத்துார், காரைக்குடி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 61 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுப்பதிவு நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடக்கும் என அறிவித்தனர். ஆனால், கல்லல் அருகே நடராஜபுரம் ராமசாமி செட்டியார் பள்ளியில் காலை 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் கொண்டு வந்து பொருத்திய பின், மீண்டும் காலை 9:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.பெரும்பாலான வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்காததால், அங்கிருந்த அரசியல் கட்சி ஏஜன்ட்களிடம் ஓட்டுச்சாவடி விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.ஓட்டுச் சாவடிக்குள் இருந்த தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் 3 பேர் என பெரும்பாலானவர்கள் ஓட்டுச்சாவடிக்குள் அடையாள அட்டை அணிந்து வரவில்லை.பெரும் பாலான ஓட்டுச் சாவடிகளில் ஏஜன்ட் வர காலதாமதம், மாதிரி ஓட்டுப்பதிவு போடுதல் போன்ற பணிகளால் வாக்காளர்களுக்கான ஓட்டுப்பதிவு காலதாமதமாக துவங்கியது. காட்சி பொருளாக சக்கர நாற்காலிகள்
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க ஏதுவாக, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் சக்கர நாற்காலி, அதை இயக்க உதவியாளர் நியமிக்கப்பட்டனர். ஆனால், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் உதவியாளர் இன்றி, சக்கர நாற்காலி காட்சி பொருளாக இருந்தது.தொகுதியில் ஆலங்குடி, திருமயம், காரைக்குடி தவிர்த்து மற்ற 3 தொகுதிகளில் ஓட்டுச்சாவடிகளுக்கு பெரிய அளவில் வாக்காளர்கள் வருகையின்றி, மந்த நிலையில் ஓட்டுப்பதிவு நடந்தது.காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாதிரி ஓட்டுச்சாவடி மையமாக அமைத்து, அங்கு வரும் வாக்காளர்களுக்கு இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிவகங்கை எஸ்.பி., டோங்க்ரே பிரவீன் உமேஷ் மேற்பார்வையில் 2,000 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் நாகலாந்து துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.