உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெரியாறு பாசனத்தில் விடுபட்ட 332 கண்மாய்கள் : 40 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை   

பெரியாறு பாசனத்தில் விடுபட்ட 332 கண்மாய்கள் : 40 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை   

பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீர் வைகை அணையை நிரப்பி,அங்கிருந்து திறக்கும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்திற்கான பாசன வசதி, குடிநீர் திட்டங்களுக்கு கைகொடுக்கிறது. சிவகங்கை மாவட்டத்திற்கான பெரியாறு பாசன தண்ணீர் மதுரை மாவட்டம் மேலுார் அருகே குறிச்சிபட்டி கண்மாயில் தொடங்கி, சிவகங்கையில் ஷீல்டு, லெசீஸ்,48 வது கால்வாய், கட்டாணிபட்டி கால்வாய் 1, 2 மற்றும் 5 ஆகிய நேரடி கால்வாய்கள் மூலம் கிடைக்கும் நீர் 136 கண்மாய்களை நிரப்புவதன் மூலம் 6038 ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடி பெறுகின்றன. இத்திட்டத்தில் காஞ்சிரங்காலில் இருந்து மறவமங்கலம் வரையிலும், மதகுபட்டியில் இருந்து சிங்கம்புணரி வரையிலான மாணிக்கம் கால்வாய் விரிவாக்கம் மற்றும் நீட்டிப்பு பாசன பகுதிகளில் 332 கண்மாய்கள் மூலம் கூடுதலாக 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். பெரியாறு கால்வாயின் ஒரு போக பாசன கடைமடை பகுதியாக சிவகங்கை உள்ளதால், நீட்டிக்கப்பட்ட பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. கண்மாய்கள் நீக்கம் பெரியாறு பாசன கால்வாய்கள் மூலம் பிரவலுார், கீழப்பூங்குடி, ஒக்கூர், பேரணிப்பட்டி, காஞ்சிரங்கால், கருங்காப்பட்டி உட்பட 32 கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்த கண்மாய்கள் மூலமும் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால், இந்த கண்மாய்கள் திடீரென பெரியாறு பாசன கால்வாய் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, விடுபட்ட கண்மாய்களை இணைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறையினர் உறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், பெரியாறு பாசன கால்வாய் மூலம் பயன்பெறும் பிற கண்மாய்கள் நிரம்பியதும், உபரி நீர் சருகணியாறு, மணிமுத்தாறு, உப்பாறு, விருசுழிஆறுகளில் திறந்து விடப்படுகின்றன. ஆனால், கால்வாய்களுக்கு அருகே உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், இந்த கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. நிர்வாக குளறுபடி 40 ஆண்டுக்கு முன் அதிகாரிகளின் நிர்வாக குளறுபடி காரணமாக பெரியாறு பாசன கால்வாய் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரவலுார், பெரிய, கண்டம்பங்குடி, கீழப்பூங்குடி, ஒக்கூர் என 32 கண்மாய்கள் பெரியாறு நீர் கிடைக்காமல் வறண்டு கிடக்கின்றன. எனவே பெரியாறு பாசன பகுதியில் இருந்து விடுபட்ட 332 கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்க முதல்வர், அமைச்சர், கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 40 ஆண்டு எதிர்பார்ப்பு நீர், நில பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகால பிரச்னையால் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் காய்ந்து கிடக்கின்றன. எனவே மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், சிவகங்கை கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி, கலெக்டர் மூலம் அரசுக்கு சென்றால், பெரியாறு பாசன நீர் விடுபட்ட கண்மாய்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை அரசு விரைந்து செய்தால், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர் என்றார். பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை படி, பெரியாறு பாசன கண்மாய்கள், பாசன பரப்பு குறித்த விபரங்களை வருவாய்துறையிடம் கேட்டுள்ளோம். அவர்கள் மூலம் விபரங்கள் கிடைத்ததும், பெரியாறு பாசன கால்வாயுடன் விடுபட்ட கண்மாய்களை மீண்டும் இணைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர். சிவகங்கை, ஆக.10- பெரியாறு பாசன கால்வாயில் இருந்து சிவகங்கைக்கு வரும் தண்ணீரை, நீட்டிப்பு பாசன பகுதியில் உள்ள 332 கண்மாய்க்கு வழங்கினால், மேலும் 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி