வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரெய்டு ரூ.3.36 லட்சம் பறிமுதல்
சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து கணக்கில் வராத ரூ.3.36 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்ற புகாரின் அடிப்படையில் டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், எஸ்.ஐ., ராஜா முகமது மற்றும் போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வந்திருந்த அரசு போக்குவரத்து கழகத்தில் முதுநிலை உதவியாளராக பணிபுரியும் ராமகிருஷ்ணனை சோதனையிட்டனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்து அலுவலகத்திலுள்ள ஒரு டேபிளில் இருந்து ரூ.3 ஆயிரத்து 250 ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.ராமகிருஷ்ணன் அரசு பஸ்களுக்கு பெர்மிட் எடுப்பதற்கும், வரி கட்டுவதற்கும் அடிக்கடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர் என்பது விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.