மாவட்ட அளவில் விவசாயிகளிடம் 50,000 டன் நெல் கொள்முதலாகும் : அதிகாரிகள் எதிர்பார்ப்பு * அதிகாரிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு அறுவடை மூலம் 50 ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படலாம் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழையால் வைகை ஆற்றில் வெள்ளம், பாசன கண்மாய்கள் நிரம்பின. இதனால் ஒரு போக நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வமுடன் முன்வந்தனர். அந்த வகையில் மாவட்ட அளவில் மானாவாரி, கிணற்று, ஆற்று, கண்மாய் பாசனம் மூலம் 1.95 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.ஜன., துவங்கியதும் சில விவசாயிகள் நெல் அறுவடை செய்து வருகின்றனர். தை பொங்கலுக்கு பின் அனைத்து விவசாயிகளும் நெல்லை அறுவடை செய்து, கொள்முதல் நிலையங்களில் வழங்க உள்ளனர். இதற்காக எஸ்.ஆர்.,பட்டிணம், நெல்முடிக்கரை ஆகிய இரு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டன. படிப்படியாக 50 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான பணிகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.பொங்கல் முடிந்ததும் விவசாயிகளிடம் இருந்து முதல் ரகம் ஒரு (100 கிலோ) குவிண்டால் ரூ.2,450க்கும், சன்னரகம் ரூ.2,405 க்கும் கொள்முதல் செய்ய உள்ளனர். இதற்கான தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே வரவு வைக்கப்படும். அதே போன்று விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி இருக்க, நெல்லை வாங்கி சுத்தம் செய்து மூடையாக்கி லாரியில் ஏற்றும் வரை மூடைக்கு (40 கிலோ) ரூ.10 வீதம் சம்பளமாக வழங்க முடிவு செய்துள்ளனர். 2024 ல் 31,133 டன் கொள்முதல்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 65 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளிடம் நெல் வாங்கியதின் மூலம் 31,133 டன் நெல் வரை அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விளைச்சலும் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு 50 ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்படலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில் திருப்புவனம் அருகே தேளியை சேர்ந்த விவசாயி கோபால், தேளி, மேலசொரிக்குளம், சங்கங்குளம், குருந்தங்குளம் ஆகிய 4 கிராமங்களில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்துள்ளார்.