தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதியுடன் சுகாதார நிலையம்
காரைக்குடி : ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையம் டிவி, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் என அனைத்து வசதிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு நிகராகவும் பிற அரசு மருத்துவமனைக்கு எடுத்துக்காட்டாகவும் செயல்பட்டு வருகிறது.சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ. சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையம் நன்கொடையால் 1960 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறக்கப்பட்டது.தினமும் 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம், பிரசவ அறை, பிரசவ பின் கவனிப்பு அறை, உள்நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு என பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. 2 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர்.பெரும்பாலும் அரசு மருத்துவமனை என்றாலே, சுகாதாரமற்ற சூழ்நிலை, உடைந்த இருக்கைகள், துர்நாற்றம் என நோயாளிகளை மிரள வைக்கும். இதற்கு பயந்து, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் மருத்துவமனைக்கு செல்வார்கள். இதனை மாற்றும் விதமாகவும் பிற அரசு மருத்துவமனைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் ஒ. சிறுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.நோயாளிகள் அமரும் வகையில் இருக்கைகள், காத்திருப்பு அறையில் பொழுது போக்கிற்கு டிவி, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம், காற்றோட்ட வசதியுடன் வெளியே இருக்கைகள் என சுகாதாரமான சுற்றுச் சூழலுடன் காணப்படுகிறது.இம்மருத்துவமனையின் சேவைகள் மற்றும் தரம் குறித்து தேசிய தரச் சான்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து தேசிய தரச் சான்றிதழும் வழங்கி உள்ளனர்.