பள்ளங்களால் விபத்து: வாகன ஓட்டிகள் தவிப்பு
திருப்புவனம்: திருப்புவனம் சாலைகளில் சிறு சிறு பள்ளங்களால் அடிக்கடி டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் பெரும்பாலான சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளன. கீழடி விலக்கில் இருந்து முனியாண்டிபுரம், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம் வரை செல்லும் இச்சாலை புதுப்பிக்கப்பட்ட இரண்டு வருடங்களிலேயே பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. கொந்தகையில் குழாய் பதிப்பு பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட ரோடு இன்று வரை சரி செய்யப்படவே இல்லை. இதே போல திருப்புவனத்தில் இருந்து புதுார், லாடனேந்தல் வழியாக நான்கு வழிச்சாலை செல்லும் ரோட்டிலும் ஆங்காங்கே பல இடங்களில் சிறு சிறு பள்ளங்கள் உருவாகி உள்ளன. திருப்புவனத்தில் இருந்து புதுார் வரை சாலையின் ஒருபுறம் மட்டும் புது ரோடு அமைக்கப்பட்டதால் மேடும் பள்ளமாக உள்ளது. இப்பாதையில் தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். கனரக வாகனங்கள் வரும் போது விலக முயன்றால் பள்ளங்களில் விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சாலைகள், தெருக்கள் மற்றும் வேங்கைப்பட்டி ரோடு, கிருங்காக்கோட்டை ரோடு பகுதிகளில் கட்சிகள், அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறாக மாதக்கணக்கில் ஒரே இடத்தில் வைக்கப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. பள்ளிகளுக்கு திரும்பும் வளைவு உள்ளிட்ட இடங்களில் பேனர் வைப்பதால் டூவீலரில் வரும் பெற்றோர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேனர்களை வைப்பதை முறைப்படுத்த போலீஸ், உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.