உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை தேவை

டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை தேவை

இளையான்குடி: சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாலை 5:00 மணிக்கு மேல் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியில் இல்லாத நிலையில் அங்குள்ள செவிலியர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தினம்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தற்போது குளிர்காலம் என்பதினால் ஏராளமானவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நோயாளிகள் சிலர் கூறியதாவது: இளையான்குடி,மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம்.இங்கு மாலை 5:00 மணிக்கு மேல் டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்கள் இருந்தால் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெற வசதியாக இருக்கும் என்பதால் தமிழக அரசு நோயாளிகளின் நலன் கருதி உடனடியாக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.விரைவில் டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் செவிலியர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை