உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்குவாரி விபத்து எதிரொலி: அதிகாரிகள் மீது நடவடிக்கை

கல்குவாரி விபத்து எதிரொலி: அதிகாரிகள் மீது நடவடிக்கை

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூ மெட்டல் குவாரியில் மே 20ல், 400 அடி பள்ளத்தில் வெடிவைக்க துளையிட்ட போது பாறை சரிந்து ஆறு தொழிலாளர்கள் பலியாகினர்.குவாரிக்கான உரிமம், எட்டு மாதத்துக்கு முன்பே காலாவதியான நிலையில், பல நுாறு அடி ஆழத்தில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குவாரி செயல்பட்டதும், ஏராளமான கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு விற்கப்பட்டதும் தெரியவந்தது. சம்பவம் நடந்தவுடன் அதிகாரிகள், குவாரி உரிமையாளரை பாதுகாக்கும் நோக்கத்துடன் அதை மூடி மறைக்க முயன்றனர். நீண்ட இழுபறிக்கு பின்னரே குவாரி உரிமையாளர் மேகவர்ணம் உள்ளிட்டோர் மீது எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேகவர்ணம் தலைமறைவான நிலையில், அவரது தம்பி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், அதிகாரிகளிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி தாசில்தார் பரிமளா, திருப்புத்துார் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தாராக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அங்கு பணிபுரிந்த தனி தாசில்தார் நாகநாதன், சிங்கம்புணரி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக கனிமவளத் துறை ஆர்.ஐ., ஆக பணிபுரிந்த வினோத்குமார் சில நாட்களுக்கு முன் மானாமதுரை மண்டல துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் மற்றும் மல்லாக்கோட்டை கிராம வி.ஏ.ஓ., பாலமுருகன் ஆகியோரை இச்சம்பவம் தொடர்பாக, கலெக்டர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ