உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோவில் திருவிழா தகராறில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை

கோவில் திருவிழா தகராறில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை

திருப்பாச்சேத்தி; சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே நாட்டாகுடி அ.தி.மு.க., கிளை செயலர் கணேசன், 65; பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை, 6:00 மணிக்கு கடையை திறக்க வந்தார். கடைக்கு பின் மறைந்திருந்த நபர், இவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.திருப்பாச்சேத்தி போலீசார் கணேசன் உடலை கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாட்டாகுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக கணேசனுக்கும், குண்டுமணி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ், திருப்பாச்சேத்தி பொறுப்பு இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் குண்டுமணியை கைது செய்தனர். கணேசன் உடல் வைக்கப்பட்டிருந்த சிவகங்கை அரசு மருத்துவமனை முன் அ.தி.மு.க., மாவட்ட செயலர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், மானாமதுரை ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குற்றவாளியை கைது செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதி அளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.செந்தில்நாதன் கூறுகையில், 'கடந்த ஐந்து நாட்களில் சிவகங்கையை சுற்றிலும் மூன்று கொலைகள் நடந்துள்ளன. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது,'' என்றார்.

பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:சிவகங்கை மாவட்டம், மாத்துார் ஊராட்சி, அ.தி.மு.க., நாட்டாக்குடி கிளை செயலர் கணேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தீபாவளியன்று சிவகங்கை, வாணியங்குடியில் உள்ள நாடக மேடையில் மணிகண்டன், அருண்குமார், ஆதிராஜா ஆகியோரை இருசக்கர வாகனங்களில் வந்த, 6 பேர் வெட்டியதில், மணிகண்டன் இறந்துள்ளார்.சிவகங்கை, களத்துாரில் ஒரு கும்பல், லட்சுமி அம்மாள் என்பவரை வீடு புகுந்து, வெட்டி படுகொலை செய்துள்ளது.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், அ.தி.மு.க., செயலர் ரமேஷ், முன் விரோதம் காரணமாக ஆயுதங்களால் பலமாக தாக்கப்பட்டுள்ளார். அக்., 28ம் தேதி சென்னை டி.ஜி.பி., அலுவலகம் அருகில் லுாப் சாலையில் நடந்து சென்ற அம்பத்துாரைச் சேர்ந்த கருடகுமாரை, ஒரு கும்பல் இரும்பு கம்பியால் தாக்கி, மொபைல் போன், பணத்தை பறித்துள்ளனர். தமிழக கிராமங்களில் உள்ள சிறுவர்கள், 'கொலை கொலையாம் முந்திரிக்காய், நிறைய நிறைய சுத்திவா' என, பாடித் திரிவதுபோல், தற்போது நிர்வாக திறனற்ற ஆட்சி நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருவதும், அதை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை