துாரெடுக்கப்படாத தேனாறு 50 கிராமங்களில் விவசாயம் பாதிப்பு
தேவகோட்டை: தேனாற்றில் முட்புதரை அகற்றாததால் 50 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து துவங்கும் தேனாறு அரியக்குடி உஞ்சனை, இருவணிவயல் கண்ணங்குடி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த தேனாறு 50 கி. மீ. துாரத்திற்கு மேல் செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. தேவகோட்டை தாலுகாவில் உஞ்சனையிலிருந்து இருவணிவயல், மங்களம் சிறுவாச்சி, பகுதி வழியாக செல்லும் இந்த ஆற்றில் முட்செடிகள், கோரைச் செடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் உலக வங்கி நிதி மூலம் சிறப்பு திட்டத்தின் கீழ் தேனாற்று நீர் இருவணிவயல், மங்களம் கண்மாய் உட்பட அனைத்து கண்மாய்களுக்கும் செல்லும் விதமாக துார் வாரி கரைகளை உயர்த்தி வாகனங்கள் செல்லும் வகையில் அகலப்படுத்தப்பட்டது. பாத்திமாபுரம், மங்களம் இடையே பெரிய அணைக்கட்டும் கட்டப்பட்டது. அதன் பின்னர் துார்வாருதல் பணியே இல்லை.தற்போது முட்புதராக கிடப்பதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே குளம் போல் தேங்கி விடுகிறது. இந்த ஆற்று தண்ணீர் மூலம் நிரம்பும் கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் நீண்ட துாரமுள்ள தேனாற்றை சிறப்பு திட்டத்தின் மூலம் முட்புதர் செடி கொடிகளை அகற்றி துார் வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.