திருப்புத்துார், கல்லலில் மழையால் பயிர் பாதிப்பா வேளாண், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு
திருக்கோஷ்டியூர்: தொடர் மழையால் திருப்புத்துார், கல்லல் ஒன்றிய விவசாயிகள் பயிர்கள் நீரில் சரிந்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேளாண், வருவாய்த்துறையினர் வயல்களில் ஆய்வு செய்து வருகின்றனர். கல்லல் ஒன்றியம் பட்டமங்கலம், பொன்னாவயல், ஆலத்திவயல், பி.கருங்குளம், நரியங்குடி, கோட்டைத்துறைப்பட்டி, புளிக்குளிச்சிப்பட்டி, சுக்காம்பட்டி, கட்டுக்கன்பட்டி, கோவில்பட்டி, திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி பகுதியில் அண்மையில் பெய்த தொடர் மழையில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சாய்ந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நரியங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:3 மாதங்களுக்கு முன்பாகவே நடவு,விதைப்பு செய்த வயல்களில் பயிர்களில் கதிர் பரிந்துள்ள நிலையில் இப்போது பெய்த மழையில் சரிந்து விட்டன. பரியாத பயிர்கள் நிமிர்ந்து விடும். பரிஞ்சு அரைப்பால் வைத்தது,விளைந்த பயிர்கள் சரிந்து முளைக்கத் துவங்கி விட்டன. அரைப்பால் வைத்த கதிர்கள் அழுகிவிடும். காய்ந்தாலும் தேறாது' என்றார். பரவலாக வந்த விவசாயிகள் புகாரை அடுத்து வேளாண்துறை அலுவலர்கள், வி.ஏ.ஓ.க்கள் வயல்களில் சரிந்த பயிர்களை ஆய்வு செய்து வருகின்றனர். வயல்களில் உள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கருங்குளம்,பிராமணம்பட்டி போன்ற இடங்களில் 3 மாதங்களுக்கு முன்பாக பயிரிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.