| ADDED : டிச 03, 2025 06:11 AM
சிவகங்கை: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் சர்வதேச விமான போக்குவரத்து அங்கீகாரம் பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் விமான நிலைய பயணிகள் சேவை குறித்த அடிப்படை பயிற்சி, பயணியர் சேவை மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு, சுற்றுலா போக்குவரத்து பயிற்சி அளித்து சான்றுகள் வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படும். இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த வயது 18 முதல் 23 க்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான ஆறு மாத கால விடுதி, தங்கி படிக்க வசதி, செலவின தொகையை தாட்கோ வழங்கும். பயிற்சியை முழுமையாக முடித்தால் சான்று வழங்கப்படும். இப்பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் www.tahdco.comஇணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.