உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகை ஆற்றில் படுகணை கட்ட ரூ.40.27 கோடி ஒதுக்கீடு

வைகை ஆற்றில் படுகணை கட்ட ரூ.40.27 கோடி ஒதுக்கீடு

வைகை ஆற்றில் திருப்புவனம் புதுார் அருகே வைகையின் இடது பகுதியில் கானுார், வலது பகுதியில் பழையனுார் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்படும்.ஆற்றில் மண் அரிமானம் காரணமாக 1.20 முதல் 1.80 மீட்டர் வரை ஆற்றில் மண் தாழ்வாக சென்றுவிட்டது. இதனால், வைகை பழைய ஆயக்கட்டு விவசாயத்திற்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படும். மேலும் மழை வெள்ள காலங்களில் வைகை ஆற்றில் நீரை தேக்காமல் விடுவதால், வீணாக கடலில் கலக்கின்றன. இதனை தவிர்த்து விவசாயத்திற்கு நீரினை திருப்பிவிடும் நோக்கில், திருப்புவனம் புதுார் அருகே வைகை ஆற்றில் ரூ.40.27 கோடியில் படுகணை கட்டப்பட உள்ளது. இந்த படுகணை கட்டினால், வெள்ள காலங்களில் கானுார் தடுப்பணை வழியாக உபரி நீர் வெளியேறி உப்பாற்றில் சென்று அங்கிருந்து செய்களத்துார் அணைக்கட்டிற்கு சென்று சுப்பன் கால்வாய்க்கு செல்லும்.இதன் மூலம் வறண்டு கிடக்கும் இளையான்குடி பகுதி பயன்பெறும். அதே போன்று பழையனுார் கால்வாயில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிருதுமால் நதியில் சென்று கட்டனுார், வீரசோழன், ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமப்புற விவசாயிகள் பயன்பெறுவர்.

6975 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் எல்.ஆதிமூலம் கூறியதாவது: கானுார் - பழையனுார் கால்வாய் பயன்பெறும் விதத்தில், டி.புதுார் அருகே வைகை ஆற்றில் படுகணை கட்டினால் 19 கண்மாய்கள் மூலம் 6975 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.அதே போன்ற வைகை பழைய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தர வேண்டிய 1000 முதல் 2000 கன அடி தண்ணீர் தடையின்றி வழங்கப்பட்டு, 20 கிராமங்கள் பாசன வசதி பெறும்.மேலும், திருப்புவனம், மடப்புரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பணிகளை விரைந்து துவக்கி, விவசாயிகளின் செயல்பாட்டிற்கு அரசு கொண்டு வரவேண்டும்.

ஷீல்டு- கான்கிரீட் கால்வாய் ரூ.28 கோடி

பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: சிவகங்கை அருகே ஷீல்டு மண் கால்வாயை அகற்றி, கான்கிரீட் கால்வாய் கட்ட நபார்டு வங்கி ஏற்கனவே ரூ.28 கோடி நிதி உதவி அளித்துள்ளது.இந்த நிதியில் மண் கால்வாயை துார்வாரி, அங்கு கான்கிரீட் கால்வாய் கட்டப்படும்.இதன் மூலம் பயன் பெறும் 41 கண்மாய்களை துார்வாரி, வரத்து கால்வாய்களும் சீர்படுத்தப்படும். ஷீல்டு கான்கிரீட் கால்வாயாக மாறும் பட்சத்தில் கல்லராதினிபட்டியில் இருந்து திருமலை, வீரபட்டி, மேலபூங்குடி, சாலுார், நாலுகோட்டை, சோழபுரம் எட்டிசேரி கண்மாய் வரை பாசன வசதி எளிதாக கிடைக்கும். இப்பணியை அரசு விரைந்து துவக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை