உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அழகப்பா பல்கலையில் உதவி பயிற்றுநர் சம்பளமின்றி நெருக்கடியில் தவிப்பு

அழகப்பா பல்கலையில் உதவி பயிற்றுநர் சம்பளமின்றி நெருக்கடியில் தவிப்பு

சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் உதவி பயிற்றுநர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவதில் இழுபறி நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இப்பல்கலையில் 53 துறைகளின் கீழ் மாணவர்கள் பலர் படிக்கின்றனர். இவர்களுக்கு கற்பிக்க பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பல்கலை மானியக்குழு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இப்பல்கலையில் 10 மாத ஒப்பந்த அடிப்படையில் உதவி பயிற்றுநர்கள் 110 பேர் வரை நியமித்துள்ளனர். இவர்கள் பி.எச்டி., முடித்து ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். மாதந்தோறும் ரூ.25,000 சம்பளம் நிர்ணயித்து பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர பேராசிரியர்களுக்கு அந்தந்த மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதே போன்று உதவி பயிற்றுநர்களுக்கு மாதம் பிறந்து 5 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு பணிபுரியும் உதவி பயிற்றுநர்களுக்கு மாதந்தோறும் 20 தேதி வரையும் சம்பளத்தை வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், பல்கலை மானியக்குழு உதவி பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்க உத்தரவிட்டும், இங்கு ரூ.25,000 மட்டுமே வழங்குகின்றனர். நிதி நெருக்கடியில் தவிக்கும் உதவி பயிற்றுநர்களுக்கு மாத துவக்கத்தில் சம்பளம் வழங்காமல், கடந்த மாத சம்பளத்தை அடுத்த மாத கடைசியில் வழங்குவதால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். பல்கலையில் நிதி அலுவலர் பதவிக்கு நேரடியாக அரசின் நிதித்துறையில் இருந்து தான் அலுவலரை நியமிக்க வேண்டும். ஆனால், இப்பல்கலையில் பல மாதங்களாக நிதித்துறையில் இருந்து அலுவலரை கேட்டு பெறாமல், மேலாண்மை துறை பேராசிரியரை கூடுதல் பொறுப்பாக கவனிக்க செய்கின்றனர். இது போன்று நிதித்துறையில் இருந்து நேரடியாக அலுவலரை நியமிக்காததால், உதவி பயிற்றுநர்களுக்கு பல்கலை விதிப்படி சம்பளம் கிடைக்க செய்வதில், பல்கலை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி