மர்ம நபர்கள் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலி: 2 பேர் காயம்
சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடியில் 6 பேர் கும்பல் வாளால் வெட்டியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். அவரது நண்பர்கள் இருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ராஜாங்கம் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40. இவரது நண்பர்கள் ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50. இவர்கள் மூவரும் நாடகமேடை அருகே நேற்று மாலை 5:00 மணிக்கு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 டூவீலர்களில் 6 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வைத்திருந்த வாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். காயமுற்ற அருண்குமாரை அங்கிருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதிராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.