திருப்புவனத்தில் செவ்வாழை பழம் ரூ.25
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று ஒரு செவ்வாழைப்பழம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.மதுரை பழ மார்க்கெட்டில் இருந்து வாழைப்பழங்கள் மொத்தமாக வாங்கி வந்து சில்லரை யில் விற்பனை செய்யப்படுகிறது. தை பிறப்பை முன்னிட்டு திருமணம், காதணி விழா, புதுமனை புகு விழா உள்ளிட்ட விசேஷங்கள் அடுத்தடுத்து வருவதால் வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் தைப்பூச திருநாள் கொண்டாடப்பட உள்ளதாலும் வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது.திருப்புவனம், தேனி, சின்னமனுார், கம்பம், கேரளா, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைப்பழங்கள் மதுரை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வாழை விவசாயம் பாதிக்கப்பட்டது.இதனால் வரத்து பெருமளவில் குறைந்து விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. 100 பழங்கள் கொண்ட செவ்வாழைப்பழ தார் கடந்த மாதம் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து400 முதல் ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.எனவே ஒரு செவ்வாழைப்பழம் 25 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு வாழைப்பழம் ஐந்து ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது எட்டு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு வாழைப்பழ தார் 350 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விலை உயர்ந்து காணப்படுகிறது. வியாபாரி ஆறுமுகம் கூறுகையில்: மதுரை பழ மார்க்கெட்டிற்கு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் பனி காலங்களில் வாழைப்பழங்கள் பழுக்க இரண்டு நாட்களாகி விடும், விரத காலங்கள், தொடர் முகூர்த்தம் உள்ளிட்டவற்றால் விலை உயர்ந்துள்ளது, என்றார். கலியாந்தூர் விவசாயி செல்லம் கூறுகையில்: தை மாத முகூர்த்த நாட்கள் என்பதால் வாழைத்தார்களின் விலை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நிரந்தர விலையாக இல்லை. தற்போத தை மாதம் தொடங்கி பங்குனி வரை மூன்று மாதத்திற்கு இந்த விலை உயர்வு இருக்கும் அதன்பின் விலை சரிந்து விடும், ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்தாலும் இதில் 80 சதவிகிதம்தான் விளைச்சலை கொடுக்கும், ஒன்பதாவது மாதத்தில் இருந்து வாழை அறுவடை தொடங்கும், சீசனை பொறுத்து தற்போது மாதிரி விலை கிடைக்கும் வரத்து அதிகரித்தால் விலையும் சரிந்து விடும், என்றார்.