திருப்புவனத்தில் வாழை விளைச்சலால் விலை சரிவு! அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை
திருப்புவனம் வட்டாரத்தில் கலியாந்தூர், கானூர், திருப்பாச்சேத்தி, மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்களை கணக்கிட்டு விவசாயிகள் வாழை பயிரிடுகின்றனர். இங்கு நாடு, ஒட்டு, பச்சை, கற்பூர ரக வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வீதம் நடவு செய்து, முதல் ஆறு மாதங்களுக்கு தினசரி தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், மரம் சாய்ந்து விடாமல்இருக்க கம்புகளால் முட்டு கொடுத்தல் பணிகளை செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்சினால் போதும், 10வது மாதத்தில் இருந்து பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை நடைபெறுகிறது.ஏக்கருக்கு 5 முதல் 7 கட்டுகள் இலைகள் கிடைக்கும். முகூர்த்த நாட்களில் ஒரு கட்டு ரூ.700 முதல் 1,000 வரை விற்கிறது. அதன்பின் விலை சரிவை சந்திக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவே வாழை இலைக்கு கூடுதல் விலை கிடைக்கும்.இதனால் இந்தாண்டு வாழை இலைக்கு விலை கிடைக்கவே இல்லை. ஒரு கட்டு ரூ.600 முதல் 450 ஆக குறைந்துவிட்டது. ஒரு கட்டு (200 பெரிய இலைகள்) ரூ.400 முதல் 450 வரை விற்கப்படுகிறது. நடுத்தர இலை கட்டு ரூ.300, சிறிய இலை கட்டு ரூ.200 க்கும் விற்கப்படுகிறது.இது குறித்து எம்.பறையன்குளம் விவசாயி குருநாதன் கூறியதாவது; பராமரிப்பு, நோய் தாக்குதலும் குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் வாழை நடவு செய்துள்ளனர். இதனால் விளைச்சல் கிடு கிடு வென உயர்ந்து விட்டது. மதுரை மார்கெட்டிற்கு திருப்புவனம், சோழவந்தான், தேனி பகுதி வாழை இலைகள் தான் விற்பனைக்கு வரும். தற்போது தென்மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு வருவதால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர்.திருப்புவனம் பகுதி இலைகள் பத்து நாட்கள் வரை வாடாமலும் இருப்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்குகின்றனர். விலை சரிந்ததால் அறுவடை கூலி கூட கொடுக்க முடியவில்லை ஒரு கட்டிற்கு அறுவடை, ஏற்று, இறக்கு கூலி போக ரூ.50 முதல் 75 மட்டுமே கிடைக்கிறது.ஏக்கருக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் 5 முதல் 7 கட்டு இலையே கிடைக்கிறது. ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்தும், விலை கிடைக்கவில்லை. ஒரு தார் ( 70 முதல் 100 காய்கள்) ரூ.60 க்கு தான் விற்பதால், பெரும் நஷ்டத்தை சந்திக்கிறோம், என்றார்.