காளைகளுக்கு அலங்கார கயிறு விற்பனை ஜோர் களைகட்டப் போகும் மஞ்சுவிரட்டு போட்டிகள்
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தைப்பொங்கலைத் தொடர்ந்து களைகட்டப் போகும் மஞ்சுவிரட்டு விழாக்களையொட்டி மாடுகளுக்கான அலங்கார கயிறுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் மாட்டுப்பொங்கல் அன்று விவசாயிகள் அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி புதிய கயிறுகளை அணிவிப்பர். மஞ்சுவிரட்டு காளைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து அலங்கார கயிறுகளை அணிவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. சிங்கம்புணரியில் பிரத்யேகமாக செயல்படும் கடைகளில் கயிறு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.ச.ராஜ்குமார், கயிறு விற்பனையாளர்: பல வருடங்களாக மஞ்சுவிரட்டு மாடுகளுக்கு கயிறுகளை விற்பனை செய்து வருகிறோம். முன்னர் வெள்ளை, சிவப்பு நிறத்தில் மட்டும் கயிறு இருக்கும். தற்போது விவசாயிகள் மாடுகளின் அலங்காரத்திற்கு அதிக அளவில் செலவு செய்கிறார்கள்.இப்பகுதியில் மேலப்பாளையம் கயிறு தான் அதிகம் விற்பனையாகிறது. அதையே நாங்களும் விற்கிறோம். மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பல்வேறு கட்சி வண்ணங்களில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கயிறுகளை தயார் செய்து கொடுக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதல் செலவு செய்து அதில் குஞ்சங்களையும் இணைத்து வாங்குகிறார்கள். ரூ. 200 முதல் 5000 வரை கயிறு விலை போகிறது. தற்போது மாடுகளுக்கு பிளாஸ்டிக் டியூப்களுடன் மூக்குக்கயிறு வருகிறது. இவை மாடுகளின் மூக்குகளை புண்ணாக்காமல் இருக்க உதவுகிறது. இதையே அனைத்து விவசாயிகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.தவிர வடமாடு மஞ்சுவிரட்டுக்கு தேவையான வடகயிறு, மாடுகளைப் பிடிக்க உதவும் வீச்சுக் கயிறுகள் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டு விற்பனைக்கு உள்ளது என்றார்.