சாலை விதியை பின்பற்றாமல் பைபாஸ் ரோடு பணிகள்; வாகன விபத்து அதிகரிக்கும் அச்சம்
சிவகங்கை; சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் முதல் இளையான்குடி ரோட்டில் கருங்குளம் வரையிலான 7.5 கி.மீ., துாரத்திற்கு ரூ.80.63 கோடியில் நடந்து வரும் பைபாஸ் ரோடு பணி சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.சிவகங்கைக்குள் கனரக வாகனம், வெளியூர் வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து 7.5 கி.மீ., துாரமுள்ள கருங்குளம் வரை ரூ.80.63 கோடியில் ஒரு திட்டமும், கருங்குளம் முதல் மானாமதுரை ரோட்டில் கீழக்கண்டனி வரை 3.2 கி.மீ., துாரத்திற்கு ரூ.60 கோடியில் பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது. ரயில்வே பாலம் கட்டுவதில் இழுபறி
முதற்கட்டமாக நடைபெற்று வரும் பணிகளில் காஞ்சிரங்கால் முதல் ராகிணிபட்டி வரை ரோடு போட்டுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி, ரயில்வேயின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதே போன்று ஆயுதப்படை குடியிருப்பில் 2 கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான ஒப்புதல் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. அமைச்சர் எ.வ., வேலு ஆய்வின் போது 60 சதவீத பணி முடிந்து விட்டதாக அதிகாரிகள் கூறினர். இது போன்று ரயில்வே பாலம் கட்டுதல், ஆயதப்படை குடியிருப்பு அகற்றுதல் போன்ற பணிகளால் காஞ்சிரங்கால் முதல் கருங்குளம் வரை பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. ரோட்டை விட குறுகிய பாலம்
காஞ்சிரங்கால்- கருங்குளத்திற்கு இடைப்பட்ட 7.5 கி.மீ., துாரத்தில் 19 சிறிய, 9 பெரிய பாலங்கள் கட்டப்படுகின்றன. பைபாஸ் ரோடு 12 மீட்டர் அகலத்திற்கு போட்டுள்ளனர். இதில் சாம்பவிகா பள்ளிக்கு பின்னாலும், பையூர் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன் போடப்பட்டுள்ள சிறு பாலம், ரோட்டின் அகலத்திற்கு இன்றி குறுகிய பாலமாக உள்ளது. பைபாஸ் ரோடு பணிக்காக ரோட்டின் இருபுறமும் கிராவல் மண்ணை 10 அடி ஆழத்திற்கு எடுத்துள்ளனர்.காஞ்சிரங்கால் முதல் கருங்குளம் வரை பைபாஸ் ரோடு அதிக இடத்தில் வளைவு ரோடாக அமைத்துள்ளனர். ரோடு வளைவு, ரோட்டின் இருபுறமும் பள்ளம், குறுகிய பாலம் கட்டியது போன்ற காரணத்தால் வாகனங்கள் எளிதில் விபத்தில் சிக்கும். ரோட்டின் இருபுறமும் பள்ளமாக உள்ள கே.வி., பள்ளி, சாம்பவிகா பள்ளி பின்புறம் உள்ளிட்ட பகுதியில் விபத்து நேரிடும் பட்சத்தில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழாத வகையில் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும். சந்திப்பு ரோட்டில் ைஹமாஸ் விளக்கு
முக்கிய ரோடு சந்திப்பு உள்ள காஞ்சிரங்கால், பையூர், பனங்காடி ரோட்டில் கே.வி., பள்ளி போன்ற இடங்களில் ைஹமாஸ் விளக்கு பொருத்தவில்லை. மேலும் சந்திப்பு ரோடுகளில் அதிகவேகமாக வரும் வாகனங்கள் சந்திப்பு ரோடுகளில் வரும் வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.