தொழில் மலர் கட்டுரை
க ட்டடக்கலை தொழில்நுட்பங்கள் எத்தனை வந்தாலும் அத்தனைக்கும் ராஜாவாக இன்று வரை கோலோட்சுவது ஆத்தங்குடி டைல்ஸ் தான். செட்டிநாட்டின் அடையாளமாக விளங்கிய ஆத்தங்குடி டைல்ஸ் இன்று, அனைவரின் மனதில் மட்டுமல்ல இல்லங்களிலும் இடம்பெற்றுள்ளது. காண்போரை வியக்க வைக்கும் பிரம்மாண்ட கட்டடங்கள், செட்டிநாட்டின் பெருமையை இன்றளவும் உலக அளவில் நிலை நிறுத்தி வருகிறது. செட்டிநாடு என்றதும் எப்படி பங்களாக்கள் நினைவுக்கு வருமோ அதுபோல் செட்டிநாடு பங்களாக்கள் என்றாலே ஆத்தங்குடி டைல்ஸ் கற்களே அனைவரின் நினைவுக்கும் வரும். இயந்திரங்கள் பயன்பாடின்றி மனித உழைப்பில் தயாராகும் ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு அன்றும் இன்றும் என்றும் வரவேற்பு உள்ளது. ஆத்தங்குடி டைல்ஸ் கற்களின் அருமை அறிந்து, பலரும் இன்று ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். காரைக்குடி அருகேயுள்ள ஆத்தங்குடியில் மட்டுமே ஆத்தங்குடி டைல்ஸ் தயார் செய்யப்படுகிறது. காரணம், ஆத்தங்குடியில் மட்டுமே கிடைக்கும் வாரி வகை மணலாகும். ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. செட்டிநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா வாசிகள் செட்டிநாட்டு பங்களாக்களை பார்வையிட்ட கையோடு ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு பணிகளையும் ஆர்வமுடன் பார்த்து அதிசயத்து வருகின்றனர். ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்: செட்டிநாட்டில் மட்டுமே பார்க்கக்கூடிய ஆத்தங்குடி டைல்ஸ், இன்று உலகம் முழுவதும் உள்ள பிரம்மாண்ட கட்டடங்களில் பார்க்க முடிகிறது. அதற்கு முக்கிய காரணம் அதன் பொலிவும், அழகும், மருத்துவ குணமே ஆகும். பல இடங்களில் ஆத்தங்குடி கற்கள் கிடைக்கும் என்று பிரசாரம் செய்தாலும், உலகில் எங்குமே கிடைக்காத ஒரிஜினல் ஆத்தங்குடி டைல்ஸ் ஆத்தங்குடியில் மட்டுமே கிடைக்கும். வாரி மணல், சிமென்ட், நிறத்துக்காக ஆக்சைடுகள் கலந்து செய்யப்படும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வீட்டிற்கு அழகையும் அள்ளி தருகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களில் செய்யப்படும். ஆத்தங்குடி டைல்சின், அற்புதம் என்னவென்றால் வெயில் காலங்களில் குளிர்ச்சியையும், குளிர் காலங்களில் வெது வெதுப்பையும் தரக் கூடியது. ஆத்தங்குடி டைல்ஸ் கற்களை பொறுத்தவரை காலங்கள் செல்லச் செல்லத்தான் பளபளப்பு கூடும். செட்டிநாட்டு பகுதி மக்கள் மட்டுமே பயன்படுத்திய ஆத்தங்குடி டைல்ஸ், இன்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், இலங்கை உட்பட வெளி நாடுகளுக்கும் செல்கிறது.