பாதை வசதி இல்லாத மயானங்கள்
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் மயானத்திற்கு போதிய பாதை வசதி இல்லாததால் கிராமமக்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர். திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மயானங்கள் அமைந்துள்ளன. இதில் கூரை, இறந்தவர் உடல்களை எரிக்க கூரை , தண்ணீர், விளக்கு வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்புவனம் நகர்ப்பகுதியில் புதுார், நெல்முடிகரை ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே மயானங்கள் அமைந்துள்ளதால் பாதை வசதி பிரச்னை இல்லை. ஆனால் கிராமங்களில் பெரும்பாலும் கண்மாய் கரை, வைகை ஆற்றை ஒட்டி புறம்போக்கு நிலத்தில் மயானம் அமைந்துள்ளன. மயானத்திற்கு செல்ல போதிய பாதை இல்லாததால் இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்ல முடிவதில்லை. இறப்பு காலங்களில் சம்பந்தப்பட்டவர்களே பாதை ஏற்படுத்த வேண்டியுள்ளது. மழவராயனேந்தல் ஊராட்சியைச் சேர்ந்த செம்பராயனேந்தல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பதினெட்டாம்கோட்டை கிராமத்திற்கு செல்லும் வழியில் வைகை ஆற்றை ஒட்டி மயானம் அமைந்துள்ளது. மயானம் செல்லும் பாதை முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றை தாண்டி தான் இறந்தவர்கள் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியுள்ளது. பாதை முழுவதும் கருவேல மரங்கள் இருப்பதால் பதினெட்டாம் கோட்டை கிராமத்திற்கு செல்லும் பாதையில் குழி தோண்டி இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்கின்றனர். பாதை ஏற்படுத்தி தர பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மயான தகன மேடை கூரையில் ஓட்டை விழுந்ததால் பிரேதங்களை எரியூட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த ஊராட்சியில் பிரான்மலை, புதுப்பட்டி, மதகுபட்டிக்கான மயானம் வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தகன மேடை கூரை பெயர்ந்து ஓட்டை விழுந்துள்ளது. மழைக்காலங்களில், இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தகனமேடையை சீரமைத்து மயானத்திற்குள் பேவர் பிளாக் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.