கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
கீழடி:கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க நேற்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 2015ல் அகழாய்வு தொடங்கின. கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வு பணிகளில் பண்டைய கால மக்களின் கட்டட கலை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றிற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தொடர்கிறது. ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அகழாய்வு நடந்த இடங்களையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டு கதிரேசன், நீதியம்மாள், கார்த்திக் உள்ளிட்ட 17 நில உரிமையாளர்களிடம் இருந்து நான்கரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் ஐயாயிரத்து 914 சதுர மீட்டர் பரப்பளவில் 15 கோடியே பத்து லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. சுற்றிலும் மூன்று அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து பார்வையிடும் வண்ணம் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது. இரவிலும் பார்வையிடும் வண்ணம் பொருட்களின் பழமையை வெளிப்படுத்தும் வகையிலும் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. ஒன்றரை வருடத்தில் பணிகள் நிறைவடைய உள்ளன. பொதுப்பணித்துறையின் கட்டுமான பிரிவினர் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ள பகுதிகளை மட்டும் அளவீடு செய்து கற்களை நட்டனர். ஒரு சில நாட்களில் அங்குள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.