உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கிராம ஊராட்சிகளுக்கு நிதி வழங்க விபரம் சேகரிப்பு

 கிராம ஊராட்சிகளுக்கு நிதி வழங்க விபரம் சேகரிப்பு

சிவகங்கை: மாநில அளவில் கிராம ஊராட்சிகளில் 7 வது நிதிக்குழு மானிய நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, ஊராட்சிகளின் வரவு செலவு விபரங்களை நவ., 30 க்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டுமான பணிகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு 7 வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வதற்காக 2025 மார்ச் 31 அடிப்படையில் கிராம ஊராட்சிகளின் பரப்பளவு, குக்கிராமங்களின் எண்ணிக்கை, மொத்த குடும்பங்கள், மக்கள் தொகை, வார்டுகள், அருகில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி துாரம், கிராமம் உள்ள சட்டசபை, பார்லிமென்ட் பெயர், வகுப்பு வாரியாக உள்ள குடும்பங்கள், மக்கள் தொகை எண்ணிக்கை, வாக்காளர் விபரங்கள், கடந்த 2019, 2021 உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள், ஓட்டு சதவீதம், ரேஷன் கடைகள், ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை, 2024--2025 ம் ஆண்டில் வேலை உறுதி திட்டத்தில் வேலை அட்டை பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை, வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை, சுய உதவி குழுக்கள் எண்ணிக்கை, கட்டட, குடிசை, ஓட்டு வீடுகளின் எண்ணிக்கை, கிராம ஊராட்சிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், தனியார் கல்வி நிறுவனங்கள் விபரம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வரலாற்று சிறப்பு பெற்ற இடம், தொல்லியல், சுற்றுலா தலம், நினைவு சின்னங்கள், கோயில்கள், பாரம்பரிய இடங்கள், உள்ளூர் விழாக்களின் விபரங்களை கேட்டுள்ளது. வி.ஏ.ஓ., அலுவலகம், சமுதாயக்கூடம், ரேஷன் கடை, நுாலகம் உட்பட 19 விதமான கட்டட வகைகள், வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் உட்பட 22 விதமான விபரங்களை ஆன்லைன் மூலம் நவ., 30 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கிராம ஊராட்சிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கிராமங்களில் உள்ள விபரங்களை அந்தந்த ஊராட்சி செயலர்கள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம ஊராட்சிகள் இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம ஊராட்சிகளில் குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அரசு இந்த விபரங்களை சேகரித்து வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி