| ADDED : பிப் 19, 2024 05:23 AM
சிவகங்கை : தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் துணை பி.டி.ஓ., உதவி பொறியாளர், ஓவர்சியர்கள் பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தலா 2 பி.டி.ஓ.,க்கள், 4 துணை பி.டி.ஓ.,க்கள், ஓவர்சீயர்கள், உதவி பொறியாளர்கள் என 120 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டிற்கு மேல் இருந்தால் கட்டாயம் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பி.டி.ஓ.,க்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்தலின் போது மண்டல அளவில் தேர்தல் பணிகளை கண்காணிக்க துணை பி.டி.ஓ., உதவி பொறியாளர், ஓவர்சியர்கள் நியமிக்கப்படுவர். ஆனால், பி.டி.ஓ.,க்கள் தவிர்த்து, துணை பி.டி.ஓ., உதவி பொறியாளர், ஓவர்சியர் உள்ளிட்டோர் ஒரே ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 4 முதல் 5 ஆண்டுக்கு மேல் வரை பணிபுரிகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இது வரை ஒரே இடத்தில் 3 ஆண்டிற்கு மேல் பணிபுரியும் இவர்களை பணியிட மாற்றம் செய்யவில்லை. இது குறித்து கேட்டால், 'சி' பிரிவு ஊழியர்களாக இருப்பதால், பணியிட மாற்றம் செய்ய தேவையில்லை என்கின்றனர்.ஆனால், நாங்களும் தேர்தல் பணியை நேரடியாக பார்க்கிறோம் என பாதிக்கப்பட்ட அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 3 ஆண்டிற்கு மேல் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.