உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அரசு பஸ்சில் கர்ப்பிணியை ஏற்ற மறுப்பு வாக்குவாதம் செய்த கண்டக்டர்

 அரசு பஸ்சில் கர்ப்பிணியை ஏற்ற மறுப்பு வாக்குவாதம் செய்த கண்டக்டர்

காரைக்குடி: காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் மதுரைக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏற முயன்ற கர்ப்பிணியை தடுத்து நிறுத்திய கண்டக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் மாலை தேவகோட்டையில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ், காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் நின்றது. திருப்புத்துார் செல்வதற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் பஸ்சில் ஏற முயன்றார். திருப்புத்துார் என்றதும், அவரை தடுத்த கண்டக்டர் வடகரை முத்து, பஸ் புறப்படும் போது தான் ஏற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தான் கர்ப்பிணி என்றும் கையில் கைக்குழந்தை உள்ளதால் தன்னை அமர வைக்கும் படி கண்டக்டரிடம் அந்தப் பெண் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தவர், மதுரை செல்பவர்கள் தான் ஏற வேண்டும், திருப்புத்துார் செல்பவர்கள் பஸ் புறப்படும் போது தான் ஏற வேண்டும் என்று தடுத்துள்ளார். அந்த கர்ப்பிணி பெண் ஆத்திரத்தில், நாங்கள் பணம் கொடுக்க வில்லையா, அரசு பஸ்சில் கர்ப்பிணி பெண் அமர்ந்து பயணம் செய்ய முடியாதா என்று கேள்வி எழுப்பிய நிலையில் கண்டக்டர் அங்குமிங்கும் நடந்தபடி அலட்சியமாக பதிலளித்தார். இதனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட கண்டக்டருக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி