உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலப்பட எண்ணெய்க்கு கட்டுப்பாடு..தேவை: கண்டுகொள்ளாத உணவு அலுவலர்கள்

கலப்பட எண்ணெய்க்கு கட்டுப்பாடு..தேவை: கண்டுகொள்ளாத உணவு அலுவலர்கள்

கடலை விவசாயம் அதிகமான இவ்வொன்றியத்தில் கடலை எண்ணெய் தயாரிப்பு அதிகம் இருந்தது. சிங்கம்புணரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 40-க்கும் மேற்பட்ட கடலை எண்ணெய் ஆலைகள் இருந்தன. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வரவால் இந்த ஆலைகளின் எண்ணிக்கை குறைந்து தற்போது 5 மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிங்கம்புணரி கடலை எண்ணெய் என்றாலே பல்வேறு மாவட்டங்களில் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்த நற்பெயரை பயன்படுத்தி நகரில் சிலர் கலப்பட எண்ணெய்யை விற்று வருகின்றனர். பெட்ரோலியத்தில் இருந்து பிரிக்கப்படும் ஒயிட் ஆயில் என்ற மினரல் ஆயிலை கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் கலப்படம் செய்து பாட்டில்களில் அடைத்து விற்கின்றனர். மினரல் ஆயிலுடன் சமையல் எண்ணெய்களுக்குரிய எசன்ஸ் வேதிப்பொருளை கலப்பதால் மக்களுக்கு அதிகம் வித்தியாசம் தெரிவதில்லை. உற்பத்தி ஆலைகளில் விற்கப்படும் விலையில் 40 சதவீதம் வரை குறைவாக விலை நிர்ணயிப்பதுடன் லிட்டருக்கு 100 மிலி கூடுதலாக ஊற்றுவதால் கிராம மக்கள் ஆபத்தை அறியாமல் விலை குறைவு என்று கருதி கலப்பட எண்ணெய்யை வாங்கி செல்கின்றனர். சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்தும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பெயரளவுக்கு மட்டுமே வந்து அவ்வப்போது சோதனை நடத்தி செல்கின்றனர். அப்படியே சோதனை செய்து கடைகளில் சாம்பிள் எடுக்க வந்தாலும், பிரபல ஆலைகளில் வாங்கப்பட்ட தரமான எண்ணைய் வகைகளை அலுவலர்களிடம் கொடுத்து சரிக்கட்டி விடுகின்றனர். இச்சுற்று வட்டாரத்தில் தரமான, கலப்படம் இல்லாத எண்ணெய் உற்பத்தி செய்து விற்கும் ஆலைகளும், கடைகளும் உள்ளன. ஆனால் ஏமாறும் மக்கள் விலை குறைவு காரணமாக அவற்றை கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கலப்பட எண்ணெய் விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை