நெடுஞ்சாலை ஓரத்தில் ஆபத்தான அங்கன்வாடி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அங்கன்வாடி கட்டடம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆபத்தான முறையில் செயல்படுவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்கான அங்கன்வாடி கட்டடம் காரைக்குடி திண்டுக்கல் சாலை ஓரத்தில் உள்ள கட்டடத்தில் செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்ட பின்னர் அங்கன்வாடி கட்டடம் சாலையை ஒட்டி அமைந்துஉள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி வேலை நேரத்தின் போது சில குழந்தைகள்பராமரிப்பை மீறி ரோட்டிற்கு ஓடிவந்து விடுகின்றன. இதனால் நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகனங்களில் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டடத்தைச் சுற்றி தற்காலிகமாக தடுப்பு அமைப்பதுடன், நிரந்தர தீர்வாக பாதுகாப்பான இடத்திற்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.