கழிவு சங்கமமாகும் அலங்கார குளம்
மானாமதுரை : மானாமதுரை அலங்காரகுளத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மானாமதுரை - தாய மங்கலம் ரோட்டில் மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புனிதம் வாய்ந்த அலங்காரகுளம் உள்ளது. இங்கு தான் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் முளைப்பாரி விழாக்களில் வளர்க்கப்படும் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து கரைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகளை யும் இங்கு தான் கரைத்து வருகின்றனர். வீர அழகர் கோயிலில் ஆடியில் நடக்கும் பிரம்மோற்ஸவ விழாவின்போது சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் இக்குளத்தில் நடப்பது உண்டு. புனிதம் வாய்ந்த அலங்காரகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டுமென்று பக்தர்கள் நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பராமரிப்பில்லாமல் கழிவு சேரும் சாக்கடையாக குளம் மாறி விட்டது.