சிவகங்கை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையம் திறப்பு தாமதம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட பேறுகால அவசரசிகிச்சை சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மகப்பேறு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 200 படுக்கைகள் உள்ளன. கர்ப்பிணிகளுக்கு 180 படுக்கைகள், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகள் உள்ளன. கடந்த ஆண்டு 4460 பிரசவம் நடந்துள்ளது. இதில் 4553 குழந்தைகள் பிறந்துள்ளன. மருத்துவக் கல்லுாரி துவங்கியதில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 4000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. மகப்பேறு பிரிவில் கூடுதல் படுக்கை வசதியுடன் மகப்பேறு பிரிவு கேட்டு நீண்ட நாட்களாக மருத்துவக் கல்லுாரி நிர் வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு ரூ.10.50 கோடி மதிப்பில் 50 படுக்கையுடன் கூடிய ஒருங்கிணைந்த பேறுகால அவசரசிகிச்சை, சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு கட்டடம் கட்டப்பட்டு பணியானது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டப்பட்டு 10 மாதத்தை கடந்த நிலையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.21ல் சிவகங்கை வருகை தந்தபோது இந்த புதிய கட்டடம் திறக்கப்படும் என டாக்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் கட்டடம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோல் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டட கட்டுமானப்பணியும் கட்டப்பட்டு முடிந்துள்ளது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் இடநெருக்கடியை தவிர்க்க கட்டி முடிக்கப்பட்ட இரண்டு கட்டடத்திற்கு விரைவாக மின் இணைப்பு பெற்று திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்டபோது டிடிசிபி அப்ரூவல் கிடைப் பதில் தாமதம் ஏற்பட்டது. அப்ரூவல் கிடைத்து விட்டது. விரைவில் மின் இணைப்பு பெறப்பட்டு கட்டடம் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றனர்.