மேலும் செய்திகள்
கால்நடை மருந்தகத்திற்கு 'ஸ்கேன் கருவி' வழங்கல்
03-Jun-2025
திருப்புவனம்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் தவிர விவசாயிகளுக்கு கை கொடுப்பது கால்நடை வளர்ப்பு தொழில் தான். கறவை மாடு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி, சேவல், வாத்து உள்ளிட்டவைகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.கோடை காலங்களில் கறவை மாடு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி உள்ளிட்டவற்றிற்கு எளிதில் நோய் தாக்குதல் ஏற்படும். நோய் தாக்குதல் ஏற்பட்டால் வரிசையாக கால்நடைகள் உயிரிழக்கும். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்துார் ஆகிய இடங்களில் மட்டுமே கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.மாவட்டத்தில் 79 கால்நடை மருந்தகங்களும், 46 கிளை கால்நடை மருந்தகங்களும் உள்ளன. திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், அல்லி நகரம், திருப்பாச்சேத்தி, பழையனூர், பூவந்தி, கொந்தகை, கழுவன்குளம் ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன.ஒரு வருடத்திற்கு சிவகங்கை மாவட்டத்திற்கு மருந்து வாங்க இரு கால்நடை மருத்துவமனைகளுக்கு 18 லட்சத்து 96 ஆயிரத்து 680 ரூபாயும், திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள ஏழு கால்நடை மருந்தகங்களுக்கு நான்கு லட்சத்து 57 ஆயிரத்து 310 ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. மாவட்டத்திலேயே திருப்புவனம் வட்டாரத்தில் தான் கறவை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு தினசரி உள்ளுர் விற்பனை போக மூவாயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய், வெயில் தாக்கம், மடி வீக்கம், வெப்ப அழற்சி போன்ற நோய் தாக்கம் ஏற்படும், நோய் தாக்கிய மாடுகள் தீவனம் எடுத்து கொள்ளாமல் நடக்க முடியாமல் சுருண்டு விழும். ஏனாதி, தேளி, கண்ணாரிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கறவை மாடுகள் வெப்ப அழற்சியால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் தொட்டில் கட்டி நிற்க வைத்தனர்.நோய் தாக்கிய மாடுகளை கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்து செல்ல முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை முன்னிட்டு கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை கூடுதலாக வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில்: கால்நடை மருந்தகங்களுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஒரே அளவு நிதி தான் ஒதுக்கப்படுகிறது. கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நிதியையும் அதிகரிக்க வேண்டும். ஒதுக்கப்படும் மருந்துகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. தனியாரிடம் பணம் கொடுத்தே வாங்கி பயன்படுத்துகிறோம். கடந்தாண்டு கிளாதரி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் நோய் தாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பின்தான் மருந்துகள் வழங்கினர். எனவே கால்நடை உயிரிழப் பிற்கு முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
03-Jun-2025