சிவகங்கை--மதுரைக்கு கூடுதல் அரசு பஸ் பயணிகள் வலியுறுத்தல்
சிவகங்கை : மதுரைக்கு செல்லும் ஊழியர்,மாணவர்களின் நலன் கருதி சிவகங்கையில் இருந்து காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.சிவகங்கையில் இருந்து மதுரைக்கு ஏராளமான அரசு ஊழியர், பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக காலை 8:00 முதல் 9:00 மணி வரை சிவகங்கையில் இருந்து மதுரைக்கு போதிய அரசு பஸ் வசதி இல்லை. இதை தவிர்க்க தினமும் காலை 8:00 முதல் 9:00 மணி வரை கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.பயணி சண்முகம் கூறியதாவது: மதுரையில் உள்ள ஐ.டி., பார்க், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்லுாரிகளுக்கு அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர்கள் செல்கின்றனர். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பஸ்சிற்காக காலை 8:00 மணி முதலே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. போதிய பஸ்கள் இல்லாததால் நெரிசலில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூடுதல் பஸ்களை இயக்க கோரி சிவகங்கை கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என்றார்.