மாரநாடு கருப்பண்ணசுவாமி கோயிலில் அடிப்படை வசதி பக்தர்கள் கோரிக்கை
திருப்பாச்சேத்தி: பிரசித்தி பெற்ற மாரநாடு கருப்பண்ணசுவாமி கோயிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாரநாடு கருப்பண்ணசுவாமி மாரநாடு, ஆவரங்காடு, தஞ்சாக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமமக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.இங்கு ஆண்டுதோறும் நடக்கும் மாசிகளரி உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தவிழாவிற்கு 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள். விடிய விடிய நடக்கும் திருவிழாவிற்காக மதுரை, சிவகங்கை, மானாமதுரையில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும். மாரநாடு கண்மாய் கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உண்டியல் மூலம் ஆண்டுதோறும் ரூ.6 முதல் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டிதருகிறது. ஆனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் இல்லை. ஏராளமான இடங்கள் இருந்தும் இங்கு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர ஹிந்து அறநிலையத்துறை முன்வரவில்லை. அரசு மாரநாட்டு கருப்பண்ண சுவாமி கோயிலில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.