சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாளுக்கு நவ திரவிய அபிேஷகம், திருமஞ்சனம் நடந்தது. அலங்காரத்தில் நின்ற கோலத்தில் நேற்று காலை 5:35 மணிக்கு பரமபத வாசல் முன் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்து, பரமபத வாசல் திறக்கப்பட்ட பின், சுவாமி எழுந்தருளினார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர். நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், நேற்று மாலை 6:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாரயணப் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார்.திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறந்து திருப்பள்ளியெழுச்சி பூஜை நடந்தது. காலை 5:00 மணிக்கு மூலவர் யோகநாராயணப்பெருமாளுக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருள தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருநாள் மண்டபத்தில் உற்ஸவ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் அலங்காரத்தில் எழுந்தருள தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசல் எழுந்தருளினார்.சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பிரவேசித்தார். நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறந்து காலை 5:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி நடந்தது. காலை 8:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. உற்ஸவருக்கும், பரமபத வாசலுக்கும் சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார்.அரியக்குடி: அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் நேற்று காலை பெருமாள் சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து காலை 5:15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5:56 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. காலை 6:00 மணிக்கு பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருருளினார். தொடர்ந்து இரவு 8:00 மணி வரை சொர்க்கவாசல் மண்டபத்தில் பெருமாள் காட்சியளித்தார்.தேவகோட்டை: தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோதண்டராமர் ஸ்வாமி கோவிலில் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகளை தொடர்ந்து அதிகாலை நான்கு மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நித்திய கல்யாணி புரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பெருமாள் சந்நிதியில் சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி உள் வீதி உலா நடந்தது.மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் நேற்று சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தியாக வினோத பெருமாள் அப்பன் பெருமாள், வேம்பத்துார் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *இளையான்குடி மதன வேணுகோபால பெருமாள் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.