சிவகங்கை : பரமக்குடி கலவரத்தன்று இளையான்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய, டி.எஸ்.பி., இளங்கோ கன்னியாகுமரிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தின கூட்டத்திற்கு சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் தகராறு ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடு நடந்தது. இதை கண்டித்து, அன்று மாலை 6 மணிக்கு, ஒரு பிரிவினர் இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகே மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பில் இருந்த டி.எஸ்.பி., இளங்கோ, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தகராறு ஏற்பட்டதால், கூட்டத்தை கலைக்க, டி.எஸ்.பி., துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர் ஆனந்த்,16, காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஐகோர்ட் உத்தரவிட்டது. இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், செப்., 22 முதல் 30 வரை நேரடியாக ஆர்.டி.ஓ., துர்க்காமூர்த்தியிடம் சாட்சியம் அளிக்கலாம் என கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். இந்நிலையில், இளையான்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய டி.எஸ்.பி., இளங்கோ கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பதிவேட்டு கூடத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டார். சென்னை நகரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.ஸ்டாலின் சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். இதை அறிந்த டி.எஸ்.பி., இளங்கோவிற்கு, நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.