உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருளில் மூழ்கியது சிவகங்கை : மின்வாரிய அதிகாரி கைவிரிப்பு

இருளில் மூழ்கியது சிவகங்கை : மின்வாரிய அதிகாரி கைவிரிப்பு

சிவகங்கை : சிவகங்கை நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் மின் இணைப்பு இல்லாமல் தெருவிளக்குகள் கடந்த 10 நாட்களாக எரியவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். சிவகங்கையில் கடந்த வாரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், சிவகங்கை நகர் முக்கிய இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. அன்றைய தினம் முதல் நகரில் அனைத்து பகுதிகளிலும் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் டிரான்ஸ்பார்மர்களை சரி செய்ய முடியாது என மின் வாரியம் கைவிரித்தது. மறு நாள் பழுதான டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக மாற்று டிரான்ஸ்பார்மரை பொருத்தி மின் இணைப்பு கொடுத்தனர். எனினும் நகர் புறங்களில் பல வீடுகளில் உள்ள டியூப் லைட் எரியவில்லை. குறிப்பாக நகராட்சி அலுவலகம் அருகே தொண்டி ரோடு முழுவதும் தெருவிளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவர்கள் மின் வசதி இன்றி அவதிப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்தும் பயன் இல்லை. சிவகங்கை நகராட்சி கமிஷனர் சுப்பிரமணி கூறுகையில், '' தெருவிளக்குகள் பராமரிப்பது மட்டுமே நகராட்சியின் வேலை. டிரான்ஸ்பார்மர்கள் பழுது மற்றும் லோ வோல்டேஜ் போன்றவற்றை மின் வாரியம்தான் சரி செய்ய வேண்டும்,'' என்றார். மேற்பார்வை பொறியாளர் குமாரசாமி ராஜா கூறுகையில், '' மாவட்டத்தில் டிரான்ஸ்பார்மர் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் ஒதுக்கீடு இல்லை. பற்றாக்குறை உள்ளதால் இருப்பதை வைத்து சமாளிக்கிறோம். தாசில்தார் அலுவலகத்தில் ஜாதிச்சான்று, வருமான சான்று கேட்கும் போது அதிகாரிகளை 'கவனித்தால் தானே' சான்று கொடுக்கின்றனர். அதுபோல் மின் வாரிய கீழ் நிலை அதிகாரிகளை 'கவனித்தால் தானே' மின் இணைப்பு சரி செய்யப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி