காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் வார்டுகளில் பணிகள் எதுவும் நடப்பதில்லை என்று கூறி தி.மு.க., உட்பட பல கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் முத்துத்துரை தலைமை வகித்தார். துணை மேயர் குணசேகரன், கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., கவுன்சிலர்கள் விஷ்ணு பெருமாள் சித்திக், நாகராஜ், கார்த்திக், ஹரிதாஸ், அ.தி.மு.க., கவுன்சிலர் தேவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.31 வார்டு தி.மு.க., கவுன்சிலர் பூமிநாதன்: குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை நிலவுகிறது. இதுகுறித்து ஓராண்டாக கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. வார்டுக்குள் சென்றால் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் எனக்குப் பேசக்கூட வாய்ப்பு அளிப்பதில்லை என்று கூறியபடி வெளிநடப்பு செய்தார்.11 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மெய்யர்: பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே மக்கள் வரி கட்ட முடியாமல் சிரமம் அடைகின்றனர். பாதாள சாக்கடைக்கு மேலும் 5 சதவீத வரி உயர்த்தியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரியை குறைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்என்றார்.மாநகராட்சி திட்டங்களுக்கு அரசிடம் இருந்து கடன் பெற்றுள்ளதால் வரியை உயர்த்தினால் மட்டுமே கட்ட முடியும் என்று கமிஷனர் சங்கரன், மேயர் முத்துத்துரையும் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கவுன்சிலர் மெய்யர் வெளிநடப்பு செய்தார்.27வது வார்டு அ.தி.மு.,க., கவுன்சிலர் பிரகாஷ்: எனது வார்டில் எந்த பணியும் நடைபெறவில்லை. டெண்டர் விட்டு 2 வருடம் ஆகியும் குடிநீர், குழாய் பதிக்கும் பணி நடைபெறவில்லை. மழை நீர் வடிகாலுக்கு ரூ.23 லட்சம் ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை.22 வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார்: எனது வார்டில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. செகண்ட் பீட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய் தடுப்புச் சுவர் கட்ட கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எம்.எல்.ஏ., வந்து ஆய்வு செய்தார் என்பதற்காக பணி புறக்கணிக்கப்படுகிறதா அல்லது அ.தி.மு.க., கவுன்சிலர் என்பதால் எனது வார்டை புறக்கணிக்கிறீர்களா என்று தெரியவில்லை. கூட்டத்தில் எங்களை பேசவும் விடுவதில்லை என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து சென்றார். 7 வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் குருபாலு: எனது வார்டில் பாதாள சாக்கடை பணி முறையாக நடைபெறவில்லை. பாதாள சாக்கடை பணி செய்பவர்கள் மக்களை மிரட்டுகின்றனர். தவிர குரங்குகள் தொல்லையும் அதிகமாக உள்ளது என்றார்.மேயர் முத்துத்துரை உங்களது வார்டில் மட்டுமா, இங்கும் தொல்லை அதிகளவில் தான் உள்ளது என்றதால், அ.தி.மு.க., வினர் கூச்சலிட்டனர்.