சிவகங்கை: சிவகங்கை ஒன்றியம், மலம்பட்டி - ஒக்குப்பட்டி ரோட்டில் இரு இடங்களில் பாலம் கட்டுமான பணி மந்த நிலையில் நடப்பதால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மலம்பட்டி ஊராட்சி சார்பில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒக்குப்பட்டி மெயின் ரோட்டில் தலா ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பாலம் கட்டும் பணி நடக்கிறது.இந்த ரோடு வழியாக தான் மலம்பட்டி, கன்னிமார்பட்டி, புதுப்பட்டி, தேவன்பெருமாள் பட்டி, ஆவரம்பட்டி, பிராயேந்தல்பட்டி வழியாக ஒக்குபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பயணிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக ரூ.12.80 லட்சத்தில் நடக்கும் இப்பால பணிக்கு மாற்றுப்பாதை பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்லும் அளவிற்கு பெரியதாக அமைத்து தரவில்லை.இதனால், சிவகங்கை, மேலுாரில் இருந்து மலம்பட்டி வழியாக ஒக்குப்பட்டி வரை இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களை 15 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி விட்டனர்.இதனால், மலம்பட்டி --- ஒக்குப்பட்டி வரையிலான 7 கிராம மக்கள் பஸ் போக்குவரத்தின்றி கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாத மாணவர்கள், விவசாய கூலிகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்கும் வரை, மாற்றுப்பாதையை அகலப்படுத்தி தர வேண்டும். நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுப்பாதை அகலமாக்கப்படும்
இது குறித்து மலம்பட்டி ஊராட்சி தலைவர் சி.வேல்முருகன் கூறியதாவது, பாலம் கட்டுமான பணிக்காக மாற்றுப்பாதை அமைத்து தந்துள்ளோம். இதை காரணமாக வைத்து டவுன் பஸ்களை ஒக்குப்பட்டி வரை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் மறுக்கின்றனர். இன்னும் மாற்றுப்பாதையை அகலமாக மாற்றி அமைத்து தருகிறேன், என்றார்.