தாயமங்கலம் பங்குனி விழா எதிரொலி ஆடு, கோழி விலை உயர்வு
மானாமதுரை: தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருவதை முன்னிட்டு மானாமதுரை வார சந்தையில் இந்த வாரம் ஆடு, கோழி விலை உயர்ந்துள்ளது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது. நாளை பொங்கல் வைபவம் நடக்கிறது.மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இங்கிருந்து தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிடுவார்கள். இதற்காக நேற்று மானாமதுரை வாரச்சந்தையில் ஆடு, கோழிகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.கடந்த வாரம் ரூ.7,000க்கு விற்ற ஆடு, நேற்று ரூ.9,000 வரை விற்றது. ரூ.500க்கு விற்ற கோழி ரூ.600க்கும், ரூ.600க்கு விற்ற சேவல் ரூ.750 வரை விற்கப்பட்டது. இது குறித்து வியாபாரி முருகன் கூறியதாவது, ரம்ஜான் பண்டிகையை தொடர்ந்து தற்போது தாயமங்கலம் கோயில் பங்குனி பொங்கல் விழாவும் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஒரு ஆட்டிற்கு ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.2ஆயிரம் வரையிலும், கோழி,சேவல் ரூ.100லிருந்து ரூ.200 வரை கூடுதல் விலைக்கு போனது, என்றார்.